Friday, 10 August 2012

Sharemarket Details-9


சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.

Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம் கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய் முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய் முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள் இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது, சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?

சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும். உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும்.

Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன் விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம் விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது.

சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது? ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus Share தருவதற்கும் இது ஒரு காரணம்.

சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd. என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20 பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10 பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும் Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும் அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50 ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/- ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/- கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால் அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே.. (Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படை இது. குறிப்பாக பங்கு முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால் Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால் பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x 10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா, Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பதிவுகளில், ஒரு பங்கை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் முன் EPS-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்போம்.

Sharemarket Details-8


இதுவரை லாப நஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். குறிப்பாக, Other Income (இதர வருமானம்), Extra ordinary Income, Operating profit, Interest (வட்டி), Net profit (நிகர லாபம்) மற்றும் EPS என்று சொல்லப்படும் ஒரு பங்கு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை ரூபாய் சம்பாதித்திருக்கிறது போன்றவற்றை கவனிக்க வேண்டும் என்று பார்த்தோம். இதில் EPS பற்றி இன்னும் விரிவாக பார்க்க வேண்டும்.

EPS பற்றி விரிவாக பார்க்கும் முன், நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்கள், கடன் மற்றும் மூலதனம் பற்றிய விபரங்களை காட்டும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் நிதியாண்டின் கடைசி நாள் தேதியிட்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுவது போல், 3 மாதத்திற்கு ஒருமுறையும் வெளியிடப்படும் (Quarterly Result). ஒரு நிதிநிலை அறிக்கை என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

A. Sources Of Funds
A 1. Equity Share Capital
A 2. Reserves & Surplus
A 3. Networth
A 4. Secured Loans
A 5. Unsecured Loans
A 6. Total Debt
A 7. Total Liabilities


B. Application Of Funds
B 1. Gross Block
B 2. Less: Accum. Depreciation
B 3. Net Block
B 4. Capital Work in Progress
B 5. Investments
B 6. Inventories
B 7. Sundry Debtors
B 8. Cash and Bank Balance
B 9. Total Current Assets
B 10. Loans and Advances
B 11. Fixed Deposits
B 12. Total CA, Loans & Advances
B 13. Current Liabilities
B 14. Provisions
B 15. Total CL & Provisions
B 16. Net Current Assets
B 17. Miscellaneous Expenses
B 18. Total Assets

C. Book Value (Rs)

இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான, முதலீட்டாளர் அத்தியாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்றால் அது A3-இல் இருக்கும் Networth என்பது. பங்கு மூலதனம் (Share Capital) மற்றும் Reserves & Surplus இரண்டையும் கூட்டினால் வருவதுதான் Networth. Share Capital என்பது பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் முதலீடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். Reserves & Surplus என்றால் என்ன? நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அனைத்தையுமே பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுதுவிடுவதில்லை. லாபத்தில் ஒரு பகுதியை சட்டபூர்வமான ஒதுக்கீடு (Statutory Reserve) என்று ஒதுக்கி வைக்கும். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்த பொது ஒதுக்கீடு (General Reserve) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைக்கும். இந்த ஒதுக்கீடுகள் எல்லாம் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு Dividend என்று வழங்கும். Dividend கொடுத்து போக மீதி இருக்கம் லாபத்தை லாப நஷ்ட கணக்கு (Accumulated Income) என்ற பெயரில் வைத்திருக்கும். இப்படி செய்யப்பட ஒதுக்கீடுகள் (Reserves) மற்றும் மீதமுள்ள லாபம் (Accumulated Income) அனைத்துமே Reserves & Surplus என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையில் பொறுப்புகள் இருக்கும் பகுதியில் காட்டப்படும். இவை அனைத்துமே Networth இல் சேர்க்கப்படும். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவில் Reserves & Surplus என்பதை Accumulated Income ஆக உதாரணப்படுத்தி இருக்கிறோம். அதாவது Share Capital என்பது பங்குதாரர்கள் செலுத்திய பணம், Reserves & Surplus என்பது நிறுவனம் சம்பாதித்த லாபத்தில் மீதமிருக்கும் பணம். ஒரு நிறுவனத்தில் முதலாளி என்பவர் பங்குதாரர்தான், அதனால் பங்குதாரர் பங்குக்கு செலுத்திய பணம் மற்றும் அந்த பங்குகளை வைத்து நிறுவனம் சம்பாதித்த Reserves & Surplus என்பது அனைத்துமே பங்குதாரர்களுக்கு தான் சொந்தம்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருந்தால் அதனுடைய Share Capital Rs.1,00,000. /- இந்த நிறுவனம் முதலாண்டில் Rs.20,000 லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் அதனுடைய EPS - அதாவது ஒரு பங்கின் சம்பாத்தியம் Rs.2/- (Net profit / Number of Equity Shares). இந்த நிறுவனம் 10% Dividend கொடுக்க முடிவு செய்திருக்கிறது (Dividend என்பது பங்கின் முகமதிப்பில் கணக்கிடப்படும்) Rs.10/- முகமதிப்புள்ள பங்குக்கு 10% என்றால் ஒரு ரூபாய் Dividend ஆக ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும். ஆக மொத்தமிருக்கும் 10,000 பங்குகளுக்கு ஒரு பங்குக்கு Re.1/- வீதம் Rs.10,000 Dividend ஆக கொடுக்கப்படும். நிறுவனத்தின் மொத்த லாபம் Rs.20,000 Dividend Rs.10,000 கொடுத்தது போக லாபத்தில் மீதம் Rs.10,000 இருக்கிறது. இது Reserves & Surplus இல் சேர்க்கப்படும். ஆக முதலாமாண்டு முடிவில் Dividend கொடுத்தது போக, நிறுவனத்தின் Networth என்பது Rs.1,10,000 ஆக இருக்கும். (Share Capital Rs.1,00,000/- மற்றும் Reserves & Surplus Rs.10,000 ஆக மொத்தம் Rs.1,10,000 Networth ஆக இருக்கிறது). ஆக ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு அதாவது Networth இன்று Rs.1,10,000 ஆகி இருக்கிறது. நிறுவனத்தின் Networth ஐ அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும், இந்த மதிப்பைதான் Book Value என்கிறோம். இதனைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிதிநிலை அறிக்கையில் கடைசியாக C-இல் குறிப்பிட்டிருக்கிறோம். அதாவது ஒரு பங்கின் மதிப்பு (Book Value) Rs.11 ஆக இருக்கிறது (1,10,000/10,000). ஒருவேளை இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டால் அல்லது இந்த நிறுவனம் இனி நாம் தொழில் செய்யப்போவதில்லை அதனால் நிறுவனத்தை மூடிவிடுவோம் என்ற ஒரு முடிவு எடுத்தால், ஒவ்வொரு பங்குக்கும் Rs.11/- திருப்பி கொடுக்கும். அதாவது பங்கின் Book Value என்னவோ அதுதான் அந்த பங்கின் உண்மையான மதிப்பு அலல்து அகமதிப்பு (Intrinsic Value of a Share).

இந்த Book Value தான் பங்கின் சந்தை விலையா அல்லது இந்த Book Value-விற்கு தான் சந்தையில் பங்கு விற்கப்படுமா என்ற ஒரு கேள்வி வரலாம். இல்லை. சந்தை விலை (Current Markeet Price - CMP) என்பது எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு வளரும் என்ற கணிப்பு, மற்றும் பொருளாதார நிலை, உலகசந்தை, அந்த பங்குக்கு சந்தையில் இருக்கும் Demand மற்றும் supply போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் Book Value என்பது இந்த நிறுவனத்தின் கடந்த காலத்தை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்படுவது. Book Value என்பது ஏற்கனவே அடையப்பட்ட மதிப்பு, சந்தை விலை என்பது எதிர்காலத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பில் நிர்ணயிக்கப்படும் விலை. (இந்த Book Value விஷயத்தில் சத்யம் கம்ப்யூட்டர் விதிவிலக்கு, ஏனென்றால் அதனுடைய கணக்கியல் எவ்வளவு தூரம் சரி ஒரு இன்றுவரை ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது).

சரி Networth மற்றும் Book Value பற்றி தெரிந்துகொண்டோம். இனி Bonus Share விஷயத்துக்கு வருவோம். ஒரு நிறுவனம் Bonus Share எப்படி தருகிறது? நிறுவனத்தின் லாபத்தில் Dividend கொடுத்து போக மீதி இருக்கும் லாபத்தை Reserves & Surplus இல் வைத்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்த Reserves & Surplus இல் இருந்துதான் Bonus Share கொடுக்கப்படும். நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட உதாரணத்தின் படி Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருக்கும், Share Capital Rs.1,00,000/- ஆக இருக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொழில் செய்து Reserves & Surplus இல் Rs.2,00,000/- வைத்திருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் Networth Rs.3,00,000/- ஆக இருக்கும். ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருக்கிறது. Reserves & Surplus இல் Rs.2,00,000/- இருப்பதால், பங்குதாரர்களுக்கு Dividend கொடுப்பதற்கு பதிலாக அதிலிருந்து Bonus Share கொடுக்கலாம் என்று நிறுவனம் முடிவு செய்து, 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும். பங்குதாரரை பொறுத்த வரை பணம் கொடுக்காமல் ஒரு பங்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே இலவசமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், Bonus Share கொடுத்த பிறகு நிறுவனத்தின் Networth மற்றும் Book Value எப்படி இருக்கிறது என்று பார்போம்.

Rs.10/- முகமதிப்பில் 20000 Share (நிறுவனம் வெளியிட்ட பங்குகள் 10000 மற்றும் bonus Share ஆக கொடுத்த பங்குகள் 10000 ஆக மொத்தம் 20000 பங்குகள்) என்பதால் Share Capital Rs.2,00,000/-. Reserves & Surplus Rs.2,00,000/- இருந்தது இதில் Rs.1,00,000/- bonus Share ஆக கொடுக்கப்படிருக்கிறது என்பதால் bonus Share கொடுத்த பிறகு Reserves & Surplus 1,00,000/- ஆக இருக்கும். ஆக இரண்டையும் கூட்டினால் Networth Rs.3,00,000/- ஆக இருக்கிறது. Networth இல் மாற்றமில்லை. ஆனால் பங்கின் Book Value என்ன? Rs.3,00,000/20000 பங்குகள் என்பதால் Book Value Rs.15/- ஆக இருக்கிறது. ஏற்கனவே Rs.30/- Book Value இருந்த பங்கின் இப்போதைய Book Value Rs.15/- மட்டுமே. Bonus Share கொடுக்கும் முன் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், ஒரு பங்குக்கு Rs.30/- கிடைத்திருக்கும். ஆனால் Bonus Share கொடுத்த பிறகு நிறுவனம் மூடப்பட்டால் ஒரு பங்குக்கு Rs.15/- தான் கிடைக்கும் ஆனால் பங்குதாரர் அவர் வைத்திருந்த ஒரு பங்குக்கு ஒரு பங்கு இலவசமாக பெற்றதால் அவர் இரண்டு பங்கு வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு பங்குக்கு Rs.15/- வீதம் 2 பங்குக்கும் சேர்த்து Rs.30/- கிடைக்கும். ஆக பங்குதாரருக்கு Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை. சரி இப்படி கணக்கு பார்த்தால் லாபமில்லை, Bonus Share கிடைத்த பிறகு பங்கு சந்தையில் பங்கின் விலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Bonus Share கொடுக்கும் முன் இந்த நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் Rs.50/- ஆக விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். Bonus Share கிடைத்த அன்றே சந்தையில் பங்கின் விலை, போனசு Share விகிதத்திற்கு குறைந்து விடும். 1:1 Bonus என்பதால், Rs.50 ஆக இருந்த பங்கின் விலை Rs.25/- (Rs.50/2) ஆக குறைந்து விடும். ஏன் இப்படி குறைகிறது? ஏற்கனவே ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருந்தது இப்போது பாதியாக குறைந்தது ஒரு காரணம். மேலும், Bonus Share கொடுப்பதற்கு முன் நிறுவனம் சம்பாதித்த நிகர லாபம் 10000 பங்குகளுக்கு மட்டுமே பிரிக்கப்படும், Bonus Share கொடுத்த பிறகு, அதே லாபம் 20000 பங்குகளுக்கு பிரிக்கப்படும். ஆக ஒரு பங்கின் வருமானம் (EPS) பாதியாக குறையும். இந்த காரணங்களால், bonus Share கொடுத்தும், சந்தையில் பங்கின் விலை உடனடியாக குறைகிறது. Bonus Share கிடைக்கும் முன் ஒரு பங்கை விற்று Rs.50/- கிடைக்குமென்றால் Bonus Share கிடைத்த பிறகு இரண்டு பங்கையும் விற்றால் தான் Rs.50/- கிடைக்கும். அதாவது Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை.

இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் எதற்கு அந்த Bonus Share?? ஆனால் ஒரு நிறுவனம் Bonus Share கொடுக்க போகிறது என்ற தகவல் வந்ததும் சந்தை முழுக்க அந்த நிறுவனம் பற்றி மிக பெரிதாக பேசிக்கொள்கிறார்களே ஏன்? எந்த லாபமும் இல்லாத ஒரு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்கதோன்றும். Bonus Share கிடைப்பதால் குறுகிய கால முதலீட்டாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டாளருக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. முதல் ஆதாயம் சந்தையில் பங்கின் விலை குறைவதால் அதிக முதலேட்டாளர்கள் நிறுவனத்தின் பங்கினை வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து Bonus கொடுக்கும் அளவு இந்த நிறுவனம் ஏற்கனவே லாபம் சம்பாதித்திருக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வருவதால், அந்த நிறுவனத்தில் பங்கு வாங்கினால் எதிர்காலத்திலும் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து அதனால் பங்கின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வார்கள். அப்படி அதிக முதலீடு செய்ய ஆர்வம் உண்டாவதால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு Demand கூடி அதனால், பங்குகளின் விலை கூடும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு Rs.5400 விலையில் இருக்கும் போது, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. உடனே பங்கின் விலை Rs.1350 ஆக குறைந்தது. அதன்பின் பங்கின் விலை சுமார் Rs.2500 வரை கூடியது. அதாவது ஒரு பங்கு வைத்து மூன்று பங்கு Bonus ஆக பெற்ற ஒரு பங்குதாரர் தான் வைத்திருக்கும் 4 பங்குகளையும் விற்றால் அவருக்கு கிடைத்த பணம் Rs.10000. ஆக Bonus Share என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் லாபம் தரும். மாறாக Bonus Share கிடைக்கப்போகிறது, நான் உடனே அதை விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று நினைத்து வாங்கினால் நிச்சயம் உடனடி லாபம் இல்லை. மேலும் Bonus Share என்பது கண்டிப்பாக இலவசமில்லை. ஏற்கனவே பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய Reserves & Surplus இல் இருந்து கொடுக்கப்படுவதுதான் Bonus Share. மற்றபடி Bonus Share நிச்சயமாக இலவசமில்லை. மேலும் Bonus Share கொடுப்பதால் எதிர்காலத்தில் EPS குறையும்.

ஆக ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் EPS-ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருந்தால் உடனே இந்த நிறுவனம் சரி இல்லை என்று முடிவு செய்துவிடக்கூடாது. அவ்வாறு முடிவு செய்யும் முன், நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பங்கு வெளியிட்டிருக்கிறதா, Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் Share Split செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். Share Split என்றால் என்ன, அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்போம்

Wednesday, 1 August 2012

Sharemarket Details-7





 







இந்த பதிவில் EPS என்பதை பற்றி இன்னும் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்போம்.


EPS என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தை வைத்து பார்போம். ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் Rs.10,000/- . அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகள் 1,000 என்று வைத்துக்கொண்டால் ஒரு பங்குக்கான வருமானம் என்ன என்பதை கணக்கிட்டால் EPS கிடைக்கும். இந்த உதாரணத்தின்படி ஒரு பங்குக்கான சம்பாத்தியம் Rs.10/- அதாவது Net Profit/ Number of Shares (10,000/1,000). இந்த நிறுவனத்தில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கும் வருடத்திற்கு 10 ரூபாய் சம்பாதிக்கிறது என்று பொருள். இரண்டு நிறுவனத்தை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது EPS ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. உதாரணமாக இரண்டு நிறுவங்களில், ஒவ்வொரு நிறுவனத்தின் வருட நிகர லாபம் Rs.10,000/- என்று வைத்துக்கொள்வோம். இதில் ஒரு நிறுவனம் 1,000 பங்குகளை வெளியிட்டிருக்கிறது இன்னொரு நிறுவனம் 2,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது. லாபத்தை வைத்து பார்க்கும்போது இரண்டு நிறுவனமும் சமமாக இருப்பதுபோல் தோன்றும், ஏனென்றால் இரண்டு நிறுவனமும் ஒரே அளவு லாபம் சம்பாதித்திருக்கிறது. ஆனால் EPS பார்த்தோமென்றால் முதல் நிறுவனத்தின் EPS Rs.10/- இரண்டாவது நிறுவனத்தின் EPS Rs.5/- மட்டுமே. நாம் முதல் நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் நமது ஒரு பங்குக்கு 10 ரூபாய் வருட சம்பாத்தியம். அதே நேரத்தில் இரண்டாவது நிறுவனத்தில் பங்கு வாங்கினோம் என்றால் ஒரு பங்கின் சம்பாத்தியம் 5 ரூபாய் மட்டுமே. அதிக வருமானம் இருக்கும் நிறுவனத்தில் தான் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது அடிப்படை. ஆக முதலாவது நிறுவனம் இரண்டாவது நிறுவனத்தை விட நல்ல நிறுவனம் என்று முடிவு செய்ய EPS தான் உதவும். எனவே EPS மிக மிக முக்கியம்.


EPS என்பது வருடாவருடம் கூடிக்கொண்டே இருக்கவேண்டும். குறைந்தபட்சம் பணவீக்கத்தை சமன் செய்யும் அளவாவது கூடி இருக்க வேண்டும். EPS கூட வேண்டும் என்றால் நிகர லாபம் கூடவேண்டும். ஆனால் சில நிறுவனங்களில் பார்த்தோமென்றால் நிகரலாபம் கூடி இருந்தாலும் EPS குறைந்திருக்கும். இது ஏன் என்று பார்போம். நாம் ஏற்கனவே பார்த்த உதாரணத்தின் படி நிகரலாபம் Rs.10,000,௦௦௦/- அது வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1,000 இந்த ஆண்டு EPS Rs.10/- . இதே நிறுவனம் அடுத்த ஆண்டு Rs.15,000௦௦௦/- லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் இரண்டாமாண்டு EPS Rs.15/-. ஒருவேளை இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் மேலும் பங்குகளை வெளியிட்டிருந்தால் EPS பாதிக்கப்படும். உதாணரமாக இந்த நிறுவனம் இரண்டாமாண்டில் 1,000 பங்குகளை வெளியிட்டிருந்தால் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 2,000, நிகர லாபமோ Rs.15,000/- ஆக EPS Rs.7.50 ஆக இருக்கும். இரண்டு ஆண்டுகளிலும் EPS மட்டுமே ஒப்பிட்டு பார்தோமென்றால் இரண்டாமாண்டு நிறுவனம் சரிவில் இருப்பது போல் தோன்றும், ஆனால் உண்மையிலேயே இரண்டாமாண்டு இந்த நிறுவனம் 50% வளர்ச்சி அடைந்திருக்கிறது. சரி அதிக பங்குகளை வெளியிட்டால் நிறுவனத்திற்கு பணம் உள்ளே வந்திருக்கவேண்டும், அந்த பணத்தை வைத்து லாபம் சம்பாதித்து இந்த நிறுவனம் EPS-ஐ கூட்டி இருக்கவேண்டுமே... இது ஏன் நடக்கவில்லை என்று நாம் கவனிக்கக் வேண்டும். ஒருவேளை இன்னொரு தொழிற்கூடம் கட்ட இந்த பணத்தை உபயோகித்தார்கள் என்றால் அந்த தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும்வரை, பங்குமூலமாக திரட்டிய பணத்தால் வருமானம் இருக்காது என்பதால் EPS குறைவாகவே இருக்கும். இந்த சந்தர்பத்தில் நாம் நிகரலாபம் குறையாமலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.


இதுமட்டுமின்றி Bonus Share என்று சொல்லப்படும் இலவச பங்குகளை நிறுவனம் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்களுக்கு கொடுத்திருந்தாலும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி அது EPS-ஐ குறைக்கும். சரி Bonus Share என்றால் என்ன? ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கும் லாபம் முழுவதையும் டிவிடென்ட் ஆக பங்குதாரர்களுக்கு கொடுப்பதில்லை. சம்பாதித்ததில் ஒரு பகுதியைத்தான் அதாவது EPS-இன் ஒரு பகுதியைத்தான் டிவிடென்ட் ஆக கொடுக்கும். மீதமுள்ள சம்பாதித்த லாபத்தை நிறுவனம் வைத்திருக்கும். இந்த லாபம் இருப்புநிலை அறிக்கையில் (Balance Sheet) Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று பொறுப்புகள் இருக்கும் பகுதியில் இருக்கும். ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் லாபம் அனைத்தும் பங்குதாரர்களுக்கே சொந்தம். அதனால் சம்பாதித்த லாபம் அத்தனையையும் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று Balance Sheet இல் வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை Dividend கொடுத்திருந்தால், டிவிடென்ட் கொடுத்து போக மீதமுள்ள லாபம் Accumulated Profit அல்லது Reserves and Surplus என்று வைக்கப்பட்டிருக்கும். இப்படி பல வருடமாக சேர்ந்த லாபத்தை - அதாவது சம்பாதித்த லாபத்தில் டிவிடென்ட் கொடுத்தது போக மீதியாக இருக்கும் லாபத்தை - பங்குதாரர்களுக்கு Bonus Share என்று இலவசமாக நிறுவனம் கொடுக்கும் (இப்படி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, நிறுவனம் விரும்பினால் கொடுக்கலாம்) . இப்படி கொடுக்கப்படுவதால், நிறுவனம் வெளியிட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கூடி, அதனால் EPS குறையும். Bonus Share கொடுக்கப்படும்போது அங்கே பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பணம் தர வேண்டியது இல்லை - அதனால் தான் அதாவது இலவசமாக கொடுக்கப்படுவதால் இதை Bonus என்று சொல்கிறோம்.


Bonus Share என்பது உன்ன்மையிலேயே இலவசம் தானா என்பது பற்றியும், EPS வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுகிறது, ஒரு பங்கை வாங்கும் போதோ விற்கும் போதோ EPS-ஐ எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், Share Split என்றால் என்ன என்பது பற்றியும் Share Split என்பது EPS-ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் வரும் பதிவில் பார்ப்போம்.

Tuesday, 31 July 2012

Sharemarket Details -6


சென்ற பதிவில் லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றை பார்த்தோம். குறிப்பாக Operating Profit, Other Income மற்றும் Extra-ordinary Items பற்றி பார்த்தோம். இது மட்டுமில்லாமல் விற்பனை வருடா வருடம் கூட வேண்டும் என்றும் பார்த்தோம். அதேமாதிரி விற்பனை மட்டும் கூடினால் போதாது, அப்படி கூடும் விற்பனை லாபத்தையும் கூட்ட வேண்டும் என்றும் பார்தோம். இனி இந்த பதிவில் வேறு என்னென்ன கவனிக்க வேண்டும் என்று பார்போம்.

லாபநஷ்ட கணக்கில் வட்டி (Interest) என்று ஒரு line item இருக்கும் (வரிசை என் 6-ல் உள்ளது : பார்க்க பாகம் 5). இது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு பணம் வட்டி செலுத்தியிருக்கிறது என்பதை குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் தொழில் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம், கிட்டத்தட்ட கடன் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆக கடன் இருந்தால் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் குறைந்த அளவு வட்டி செலவு செய்திருக்கலாம், வேறுசில நிறுவனங்களோ சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டிக்கே செலவிடலாம். நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தபட்சம் மூன்று வருட லாபநஷ்ட கணக்கை நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு வருடமும் வட்டிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்தியிருக்கிறது என்று பொருள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்.

கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனம் பணத்தை இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யலாம். ஒன்று நல்ல லாபம் சம்பாதித்து லாபத்தில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்திருக்கலாம் அல்லது புதிதாக பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடன்களை திருப்பி செலுத்தி இருக்கலாம். புதிதாக பங்குகளை வெளியிடாமல் (லாபத்தின் மூலம்) கடன்களை திருப்பி செலுத்தும் அளவு இந்த நிறுவனத்திடம் பணம் இருந்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் நடக்கிறது என்று அர்த்தம். நிச்சயமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் முதலீடு நன்கு வளரும் என்று நம்பலாம். (இதை மட்டுமே வைத்து முதலீடு செய்து விடக்கூடாது... முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான அம்சங்களில் இதுவும் ஒன்று.) புதிதாக பங்குகளை வெளியிட்டு கடன்களை அடைத்திருக்கிறது என்றால் அதன் சாதக பாதகங்களை வரும் பதிவுகளில் கவனிப்போம்.

சில நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கும் ஆனால் சம்பாதித்த லாபத்தில் பெரும்பகுதி வட்டிக்கு செலவாகி இருக்கும். இப்படி லாபத்தில் பெரும்பகுதியை வட்டி செலுத்த செலவிட்டால், முதலீடு செய்தவர்களுக்கு என்ன மிஞ்சும்? அல்லது முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தில் விகிதம் குறையத்தானே செய்யும்? அதனால் அதிக வட்டி செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ரொம்ப யோசித்து முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சுபிக்க்ஷா சிக்கலில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. அதற்கு சுபிக்க்ஷாவின் கடனும் ஒரு முக்கிய காரணம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் வட்டிக்கு செலவிட்டு, நடப்பு முதலீடு என்று சொல்லப்படும் அன்றாட தேவைக்கான Working Capital-ல் பாதிப்பு வந்து சுபிக்க்ஷா இன்று மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. ஆக அளவுக்கதிகமான வட்டி ஒரு எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில நிறுவனங்கள் தொழில் விருத்தி செய்ய புதிதாக கடன் வாங்கியிருக்கும். அதாவது புதிதாக ஒரு தொழிற்கூடம் அமைக்க கடன் வாங்கியிருக்கலாம். தொழிற்கூடம் என்பதை ஒரு நாளில் கட்டி முடித்து அடுத்த நாளே உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்துவிட முடியாது. நிறுவனம் இருக்கும் தொழிலை பொறுத்து கட்டுமானத்திற்கான காலம் ஆறு மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். அதற்கு பிறகுதான் புதிய தொழிற்கூடம் உற்பத்தி ஆரம்பித்து விற்பனை கூடி அதன்மோலம் லாபமும் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்பும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும் - விற்பனை கூடி இருக்காது. இது நஷ்டதிற்கோ அல்லது குறைந்த நிகர லாபத்திற்கோ வழிவகுக்கலாம். எனவே வட்டி கூடியிருக்கிறது என்றதும், நிறுவனம் மோசம் என்று முடிவு செய்து விடாமல், நிறுவனம் சம்மந்தப்பட்ட செய்திகளை படித்துப்பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம். எங்கே தகவல் கிடைக்கும்? அனைத்து நிறுவனங்களும் தமது தொழில் சம்மந்தப்பட்ட தகவல்களை பங்குசந்தைக்கு கொடுக்க வேண்டும். அதனால் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்க்கலாம்.

ஆக விற்பனை கூடி இருக்க வேண்டும், Operating Profit கூடி இருக்க வேண்டும், Extra-ordinary Items பற்றி கவனிக்க வேண்டும், வட்டி செலவை கவனிக்க வேண்டும். லாபநஷ்ட கணக்கு என்பது இதை எல்லாம் கடந்துதான் நிகர லாபம் என்ற நிலையை அடைகிறது. நிகர லாபம் விற்பனையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டு விற்பனை 1,000 ரூபாயாக இருந்து நிகர லாபம் (Net Profit) 200 ரூபாய இருந்தால் நிகர லாபம் (Net Profit Ratio) 20 சதவிகிதம் என்று சொல்கிறோம் (200/1000x100). ஒவ்வொரு வருடமும் இந்த Net Profit Ratio என்பது கொஞ்சமாவது கூட வேண்டும். கூடாவிட்டாலும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நிகர லாபம்தான் முதலீட்டளர்களுக்கான லாபம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தான் முதலீட்டளர்களுக்கு நிறுவனம் Dividend என்ற பெயரில் வருடா வருடம் கொடுக்கும். மேலும் ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு நிறுவங்களின் Net Profit Ratio-வை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எந்த நிறுவனத்தின் Ratio அதிகமோ அந்த நிறுவனம் நன்றாக இயங்குகிறது என்று முடிவுக்கு வரலாம். இந்த ஒப்பீடு ஒரு வருடத்தை மட்டும் வைத்து செய்யாமல் குறைந்தபட்சம் 2 நிறுவனங்களின் 2 ஆண்டு கணக்கை வைத்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஒப்பிடுதல் (Comparison), Ratio கணக்கிடுதல் இவையெல்லாம் நிறுவனத்தின் லாபம் சம்பாதிக்கும் திறனை நாம் உணர்ந்துகொள்ள உதவும்.

இனி லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பகுதிக்கு நாம் வருகிறோம். அதுதான் EPS என்ற Earning Per Share என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஒரு பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சொல். EPS பற்றி பேச நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் EPS பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.

அதற்குமுன் இதை படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு பங்கு வாங்குமுன் இவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டுமா என்று தோணலாம். பங்கு சந்தை முதலீடு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் நமக்கு வருமானத்தை கொடுக்கும். அதனால் அடிப்படையில் நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வருமானம் பார்க்க அதிக வாய்ப்பு உண்டு.

தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான் விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

மேற்கண்ட முன்னூட்டம் இன்றைய சில தரகர்கள் மற்றும் சிலரின் தவறான நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (அனைத்து தரகர்களுமே தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது). இந்த மாதிரி தவறான வழிகாட்டுதல்களை தவிர்க்க, நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க நாம் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும். லாபம் சம்பாதிப்பதுதான் பங்கு சந்தை முதலீட்டின் ஒரே குறிக்கோள் என்றாலும், அதைவிட முக்கியமாக முதலீடு அழிந்து போகாமல் இருக்க வேண்டுமே...!!! அதற்க்காக இப்படி நிறைய விஷயங்களை அலசி பார்த்து, அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களின் (Fundamentally Strong Companies) பங்குகளை வாங்கினோமானால் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். எனவே நாம் ஏற்கனவே கூறிய விஷயங்களை எல்லாம் கவனித்தே ஆகவேண்டும்.

Sunday, 29 July 2012

Sharemarket Details-5


லாப நஷ்ட கணக்கு என்பது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு விற்பனை செய்திருக்கிறது, என்னென்ன செலவுகள் செய்திருக்கிறது மொத லாபம் என்ன, நிகர லாபம் என்ன போன்ற விஷயங்களை கொண்டிருக்கும். வழக்கமாக லாப நஷ்ட கணக்கு வருடத்திற்கு ஒருமுறை அதாவது 12 மதங்களுக்கான கணக்காக இருக்கும். பங்கு சந்தையில் பதிவு செயயப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர கணக்கை பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் லாப நஷ்ட கணக்கை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு ஒரு விதிமுறை பங்குசந்தையில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

லாப நஷ்ட கணக்கு எனபது அந்த நிறுவனத்தில் லாப நஷ்டத்தை பற்றிய குறிப்பு என்றால் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நிறுவனத்தின் சொத்து எவ்வளவு, அந்த நிறுவனத்தின் பொறுப்பு அல்லது அந்த நிறுவனம் கொண்டிருக்கும் கடன்கள் எவ்வளவு என்பதை குறிக்கும் ஒரு statement. ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் நிறுவனம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும். உதாரணமாக 20010-2011 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.2011 தேதியிட்டு சமர்பிக்க பட்டிருக்கும். அதேபோல் 20011-2012 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.2012 தேதியிட்டு சமர்பிக்கப்படும். இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைக்கும் இடைப்பட்ட 12 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிப்பதுதான் லாப நஷ்ட கணக்கு. இதுமட்டுமின்றி பணம் எந்த வழியில் வந்தது அது எப்படி எல்லாம் செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதை Cash Flow statement என்று அழைக்கிறோம். ஆக, நிறுவனம் 3 விதமான அறிக்கைகள் சமர்பிக்கிறது.

1. லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account)
2. நிதிநிலை அறிக்கை (Balance Sheet)
3. Cash Flow Statement

முதலில் லாப நஷ்ட கணக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபம் சம்பதிததா அலல்து நஷ்டமடைந்திருக்கிறதா என்பதை குறிக்கும். நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.

1. Sales
2. Operating Expenses
3. Operating Profit (1-2)
4. Other Income
5. NPBDIT (Net Profit Before Depreciation, Interest and Tax) (3+4)
6. Interest
7. NPBDT (Net Profit Before Depreciation and Tax) (5-6)
8 . Depreciation
9. NPBT (Net Profit Before Tax) (7-8)
10. Extra-ordinary items - Profit / Loss
11. NPBT (Net Profit Before Tax - post extra-ordinary items) (9 and 10)
12. Tax
13. NPAT (Net Profit After Tax)/Reported Net Profit (11-12)
14. Earning per Share (EPS)

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? முதலில் இந்த நிறுவனம் லாபத்தில் இருக்கிறதா அலல்து நஷ்டத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வரிசை எண் 13-ஐ பார்க்க வேண்டும், இதில் பார்த்தால் நமக்கு அந்த நிறுவனம் எவ்வளவு நிகர லாபம் சம்பாதித்திருக்கிறது என்று தெரியும். ஆனால் இதை மட்டுமே வைத்து, லாபத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்றால் சரி என்று சொல்வதற்கு முன் இன்னும் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனத்தின் லாபத்தை பற்றி நாம் ஒரு கணிப்புக்கு வர வேண்டும் என்றால் ஒரு வருட லாபத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது. மேலும் நிகர லாபத்தை மட்டும் பார்ப்பதை விட Operating Profit ஐ பார்க்க வேண்டும். operating Profit என்றால் என்ன? அந்த நிறுவனம் செய்யும் விற்பனையில் செலவுகளை கழித்த பின் வரும் லாபத்தை operating Profit என்கிறோம். தேய்மானம், வட்டி மற்றும் வருமானவரி போன்றவற்றை கழிக்கும் முன் இருக்கும் லாபம்தான் Operating Profit. குறைந்தபட்சம் மூன்று வருட லாப நஷ்ட கணக்கை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பிடும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? அந்த நிறுவனத்தின் விற்பனை (sales) வருட வருடம் கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு நிறுவனம் என்பது வருடா வருடம் வளர வேண்டும். வளர்ச்சி என்பது விற்பனையில் தெரிய வரும். விற்பனை கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு கூடும் விற்பனை லாபத்தை கூட்டுகிறதா என்று கவனக்க வேண்டும். விற்பனை கூடினால் லாபம் கூடத்தானே வேண்டும் என்று நமக்கு தோணலாம். ஆனால் சில நிறுவனங்கள் விற்பனையை கூட்டினாலும் விற்பனை விகிதத்தை விட செலவு விகிதம் கூடி இருந்தால் லாபத்தை பாதிக்கும்.

உதாரணமாக சென்ற வருடம் விற்பனையில் 80% செலவு ஆகி இருக்கிறது என்றால் விற்பனையில் 20% லாபமாக இருக்கும். அதே நிறுவனம் இந்த ஆண்டு விற்பனையை இரண்டு மடங்காத கூட்டி இருக்கிறது என்றால், லாபமும் இரண்டு மடங்காக கூடி இருக்க வேண்டும். கீழே இருக்கும் உதாரணத்தை பார்த்தால் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40

Year 2
1. Sales 400
2. Operating Expenses 350
3. Operating Profit (1-2) 50

மேலே இருக்கும் உதாரணத்தில், நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டில் லாபம் கூடி இருக்கிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது தெரியும். ஆனால் இந்த நிறுவனம் உன்ன்மையிலேயே லாபத்தை கூட்டி இருக்கிறதா? இந்த நிறுவனம் முதலாண்டு Rs.200 விற்பனை செய்து Rs.40 ஐ வருமானமாக அடைந்திருக்கிறது. அதாவது விற்பனையில் 20% லாபம் (40/200x100). இரண்டாம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை Rs.400 ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விற்பனை உயர்ந்திருப்பதால் அந்தன் லாபமும் கூட வேண்டும். லாபம் Rs.50 ஆக இருக்கிறது. அதாவது உயர்ந்திருக்கிறது - ஆனால் இந்த நிறுவனம் முதலாண்டை விட இரண்டாம் ஆண்டில் சரிவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் அப்படி? முதலாம் ஆண்டில் விற்பனையில் 20% லாபமாக சம்பாதித்த நிறுவனம் இரண்டாம் ஆண்டில் அதே அளவு விகிதத்தில் Rs.80 லாபமாக சம்பாதித்திருக்க வேண்டும் (Rs.400 x 20% = Rs.80), ஆனால் Rs.50 மட்டுமே லாபம் சம்பதிதிருக்கிறது. ஏன் இடந்த வித்தியாசம்? செலவு அதிதமாகி இருக்கிறது. முதலாண்டில் Rs.200 க்கு Rs.160 செலவு என்றால் இரண்டாம் ஆண்டு விற்பனை இரண்டு மடங்கு ஆகும்போது செலவும் இரண்டு மடங்காகி Rs.320 தான் இருக்க வேண்டும், ஆனால் செலவு Rs.350 ஆக உயர்ந்திருக்கிறது. செலவில் Rs.30 கூடியதால் அந்த அளவு லாபம் குறைந்துவிட்டது. ஆக இரண்டாம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் செலவுகள் கூடி லாபத்தை குறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிறுவனத்தால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை, விற்பனையை மட்டும் கூட்டினால் போதாது, விற்கும் பணத்தை செலவுகளை கட்டுக்குள் வைத்து லாபமாக மாற்ற இந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பதால், இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் நம் முதலீடு எப்படி வளரும்?? ஆக லாப விகிதத்தை operating Profit ஐ முதலில் கவனிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல், மூன்று முதல் ஐந்து ஆண்டு லாப நஷ்ட கணக்கை கவனிக்க வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, வரிசை எண் 10 இல் இருக்கும் Extra-ordinary items. சில நிறுவனங்களில் லாப நஷ்ட கணக்கில் இது இருக்கும். முதலில் Extra-ordinary items என்றால் என்ன என்று பார்போம். நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டின் மூலம் சம்பாதிக்காத வேறு விதமான வருமானங்களை Other Income என்னும் வரிசை எண் 4 இல் சேர்க்கலாம். உதாரணமாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தன்னிடம் இருக்கும் உபரி ரொக்க பணத்தை வங்கியில் Deposit செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி, Other Income இல் சேரும். ஆனால் ஒரு நிறுவனம் தன்னிடம் இருந்த ஒரு தொழிற்கூடத்தை அல்லது தன்னிடம் இருந்த தொழிலில் ஒரு பகுதியை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் Extra-ordinary items ஆக கருதப்படும். வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி வருடா வருடம் கிடைக்க கூடியது, ஆனால் பிற இரண்டும் அப்படி இல்லை. ஒரு முறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இன்னொரு உதாரணம் நிறுவனம் தொழில் விஷயமாக வேறு யார் மேலாவது வழக்கு போட்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பின் மூலம் கிடைக்கும் நஷ்டஈடு Extra-ordinary items இல் வருமானமாக கருதப்படும். அதே போல் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்தால் அதுவும் Extra-ordinary items இல் செலவாக கருதப்படும். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், Other Income வேறு Extra-ordinary items வேறு என்பது. Other Income என்பது நிறுவனம் செய்யும் தொழில் சார்ந்த இதர வருமானங்கள். Extra-ordinary items எதேச்சையான, வருடா வருடம் நடக்காத ஒரு விஷயத்தால் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம்.

Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40
Extra-ordinary Income -
Net Profit 40

Year 2
1. Sales 400
2. Operating Expenses 420
3. Operating Profit (1-2) (20)
Extra-ordinary Income 120
Net Profit 100


இந்த உதாரணத்தில், நிகர லாபம் (Net Profit) இரண்டாம் ஆண்டில் நன்கு கூடி இருக்கிறது. நிகர லாபத்தை மட்டும் பார்த்தால் நிறுவனம் மிக நன்றாக செயல்பட்டு லாபம் சம்பாதிப்பது போல் தெரியும். விற்பனை முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகி இருக்கிறது, ஆனால் நிகர லாபம் (Net Profit) இரண்டு மடங்குக்கு மேல் இருக்கிறது, இது மிக நல்ல நிறுவனம் என்று முடிவு செய்யத்தோன்றும். முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியது Extra-ordinary items. இதில் Extra-Ordinary Income என்று ஒரு (line Item) Rs.120 இருக்கிறது. நிகர லாபம் Rs.100. இதிலிருந்து Extra-Ordinary Income ஆன Rs.120 ஐ கழித்தால் மிஞ்சுவது Rs.20 நஷ்டம்...!!! ஆக முதலாண்டை விட இரண்டாமாண்டு இந்த நிறுவனம் செயல்பாடு மோசமாகி, நஷ்டத்தில் இருக்கிறது, எனவே இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்வது சரி அல்ல என்று நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் Extra-Ordinary items என்பது வருடா வருடம் கிடைக்கப்போதும் லாபம் அல்லவே. (Extra-Ordinary items இல் நஷ்டம் இருந்தாலும், அதை விலக்கி விட்டு அதன் பிறகே நிறுவனத்தின் செயல்பாடு பற்றி முடிவு செய்ய வேண்டும்)

இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்கள் லாபநஷ்ட கணக்கில் பார்க்க வேண்டும். அவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அதற்கு முன் நிறுவனங்களில் லாபநஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை எங்கே கிடைக்கும்? எப்படி பார்ப்பது என்று யோசிப்பவர்கள் கீழே இருக்கும் வலைத்தளங்களில் நுழைந்தால் தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்,
http://www.moneycontrol.com
http://economictimes.indiatimes.com
http://www.indiabulls.com/
http://www.bseindia.com

Saturday, 28 July 2012

Sharemarket Details-4

 முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.

பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) :
ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) :
இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.

3. தின வர்த்தகம் (Day trading):
இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!!

பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளகாது என்று சொல்லப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை வரும் பதிவில் பார்ப்போம்.

Thursday, 26 July 2012

Sharemarket Details-3

இதுவரை பங்கு என்றால் என்ன என்று பார்த்தோம், இனி பங்குகளை வாங்கி விற்பதற்கு தேவையான சில அடிப்படை விஷயங்களை கவனிப்போம்.

ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) கொடுக்கும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் (share certificate number) இருக்கும். ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (shareholders register) வைத்திருக்கும். அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை இப்படி அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.

பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்றால், அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் அவரிடமிருந்து பங்கு வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடப்பட்ட பங்கு பத்திரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதன் பிறதுதான் புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும். மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை.

இப்போதும் நிறுவனம் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது, ஆனால் பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "Dematerialization" என்று அழைக்கப்படும் "Demat" முறை வந்து விட்டது. இந்த முறைப்படி, பங்கு அச்சடிக்கும் வேலை எல்லாம் இல்லை. எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் Demat account என்று சொல்லப்படும் Demat கணக்கை தொடங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு முறை புரோக்கரை தொடர்பு கொண்டு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தோமென்றால் நம் பெயருக்கு Demat account தொடங்கப்படும். Demat account தொடங்கிய பின் நம்முடைய Demat ஐ வைத்து கணினி மூலமாக நாமே நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இங்கே நாம் நேரிடையாக என்று குறிப்பிடுவது புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் ஒரு வித செயல்பாட்டின் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். நாம் Demat account ஆரம்பித்த பின், நம்முடைய Demat மூலமாக மும்பை பங்கு சந்தை என்று சொல்லப்படும் BSE மற்றும் தேசிய பங்கு சந்தை என்று சொல்லப்படும் NSE ஆகிய இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கி இரண்டே நாளில் நம்முடைய Demat-ல் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். Demat என்பது நம்முடைய வங்கி கணக்கு மாதிரிதான். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால், நம் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் Demat-ம். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய Demat கணக்கிலிருந்து கழிக்கப்படும்.


ஆக இன்றைய சூழ்நிலையில் Demat இருந்தால்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Demat account எப்படி ஆரம்பிப்பது? Demat ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு பங்கு புரோக்கரை அணுக வேண்டும். உதாரணமாக ICICI, Kotaksecurities, Indiainfoline, Indiabulls இப்படி நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டால் Demat ஆரம்பிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே முடித்து தருவார்கள். நாம் ஒரு புரோக்கரிடம் Demat ஆரம்பித்தால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? அதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே..! நாம் Demat ஆரம்பித்தால் வருடா வருடம் Demat கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் வசூலிப்பார்கள். இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை நாம் அந்த Demat மூலமாக பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வாங்கிய அல்லது விற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நம்மிடம் புரோக்கர் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணங்கள் ஒவ்வொரு புரோக்கருக்கும் மாறுபடும். அதனால் Demat ஆரம்பிக்கும் முன் கட்டண விஷயங்களை விசாரித்துப் பார்த்து அதன் பிறகு எந்த புரோக்கர் என்று முடிவு செய்து Demat ஆரம்பிப்பது நல்லது.